சென்னிமலை போலீஸ் நிலையத்தில்ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
காதல் ஜோடி
சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26). இவருக்கு சென்னிமலையில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்க்கும் பார்வதி (26) என்ற இளம் பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் இருவரும் சென்னிமலையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
அதேபோல் சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் ஊராட்சியை சேர்ந்த மனோஜ் (29) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பவித்ரா (வயது 25) என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பெற்றோரிடம் பேச்சுவார்த்தை
சென்னிமலை பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் கோபிநாதன் (25) என்பவரும், அதே நிறுவனத்தில் வேலை செய்த திவ்யதர்ஷினி (வயது 20) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தார்கள்.
இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
நேற்று ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் அவர்களின் பெற்றோர்களை போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் இந்த திருமணத்தை ஏற்று கொண்ட பெற்றோர்களிடம் காதல் ஜோடிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினமும் ஒரு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.