சென்னிமலையில், இடிந்து விழும் நிலையில் இருந்த அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்துக்கு மாற்றம் 'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அங்கன்வாடி மையம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சென்னிமலையில் இடிந்து விழும் நிலையில் இருந்த அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இடிந்து விழும் நிலையில்...
சென்னிமலை பார்க் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது.
மேலும் மழைக்காலங்களில் கட்டிடத்திற்குள் மழை நீர் தேங்கியது. இதனால் குழந்தைகள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று பிரசுரமாகியது.
வாடகை கட்டிடத்துக்கு மாற்றம்
இதைத்தொடர்ந்து சென்னிமலை குழந்தைகள் நலத்திட்ட அலுவலரின் நடவடிக்கையின் பேரில் பழுதடைந்த அங்கன்வாடி மையம் உடனடியாக பூட்டப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் சிதம்பரம் பிள்ளை வீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்துக்கு அங்கன்வாடி மையம் நேற்று மாற்றப்பட்டது.
இதுபற்றி அங்கன்வாடி மைய பணியாளர் ஒருவர் கூறுகையில், 'குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அங்கன்வாடி மையம் வேறு இடத்தில் உள்ள வாடகை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இன்று (அதாவது நேற்று) சில குழந்தைகள்தான் வாடகை கட்டிடத்துக்கு மாற்றப்பட்ட அங்கன்வாடி மையத்துக்கு வந்து உள்ளன. இதுகுறித்து அனைத்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை (அதாவது இன்று புதன்கிழமை) முதல் அனைத்து குழந்தைகளும் புதிய கட்டிடத்திற்கு வருவார்கள்,' என்றார்.