சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்கரும்புகளை அரவை செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்கம்மாபுரத்தில் பரபரப்பு
சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புகளை அரவை செய்யக்கோரி கம்மாபுரத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்மாபுரம்,
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவரப்பூர், பெரியகோட்டிமுளை, சின்னகோட்டிமுளை, பெறுவரப்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து பெண்ணாடம் சித்தூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால், இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பினர்.
அரவை செய்யப்படவில்லை
இந்த நிலையில் சேத்தியாத்தோப்பில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள், மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம், தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பக்கூடாது எனவும், சேத்தியாத்தோப்பில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்புங்கள் எனவும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து விவசாயிகள், கடந்த ஒருவாரமாக சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, கரும்புகளை வெட்டி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புகளை, கடந்த 4 நாட்களாக அரவை பணிக்கு எடுத்துக்கொள்ளாமல், ஆலையின் உள்ளே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆலைக்கு அனுப்புவதற்காக வெட்டி வைத்த கரும்புகளும் டிராக்டர் இல்லாததால், விவசாய நிலத்திலும், நடுரோட்டிலும் வெயிலில் காய்ந்து வருகின்றது. ஆலைக்கு அனுப்பிய கரும்பிற்கான தொகையையும் ஆலை நிர்வாகம் வழங்க வில்லை என தெரிகிறது. இதுகுறித்து சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் தெரிவித்தும் கரும்புகளை அரைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில் கம்மாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சர்க்கரை ஆலையின் மெத்தனபோக்கை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.