ஈரோடு கனி மார்க்கெட்டில்ஜவுளிக்கடைகளை காலி செய்த வியாபாரிகள்மாற்று இடத்தில் நாளை முதல் வியாபாரம்
ஈரோடு கனி மார்க்கெட்டில் ஜவுளிக்கடைகளை வியாபாரிகள் காலி செய்தனர். மாற்று இடத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் வியாபாரம் தொடங்குகிறது.
ஈரோடு கனி மார்க்கெட்டில் ஜவுளிக்கடைகளை வியாபாரிகள் காலி செய்தனர். மாற்று இடத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் வியாபாரம் தொடங்குகிறது.
புதிய வணிக வளாகம்
ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தை வளாகத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் பொது ஏலத்தில் அதிக முன்வைப்பு தொகை, வாடகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறி வியாபாரிகள் கலந்துகொள்ளவில்லை. இதனால் வணிக வளாகம் ஒரு ஆண்டாக மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இந்த நிலையில் புதிய வணிக வளாகம் அருகில் உள்ள கடைகளை காலி செய்து வணிக வளாக கடைகளை ஏலத்தில் விட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து அங்குள்ள ஜவுளிக்கடைகளை அகற்றக்கோரி மாநகராட்சி அதிகாரிகள் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதனால் ஜவுளி வியாபாரிகள், அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து, தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க கோரிக்கை விடுத்தனர்.
மாற்று இடம்
ஈரோடு சின்ன மார்க்கெட் பகுதியில் ஜவுளி கடைகளை அமைக்கவும், அங்குள்ள காய்கறி கடைகளை எதிரே உள்ள காலிஇடத்தில் மாற்றவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் சின்ன மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கனி மார்க்கெட் அருகில் மகிமாலீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள பழைய சந்தையில் ஜவுளிக்கடைகளை தற்காலிகமாக அமைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அளவீடு பணிகள் நடந்தது. சுமார் 120 ஜவுளிக்கடைகள் அமைப்பதற்கான 'தகரசெட்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் கனி மார்க்கெட் பகுதியில் கடை அமைத்திருந்த வியாபாரிகள் நேற்று கடைகளை காலி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஜவுளிகளை பண்டல்களாக கட்டி வைத்து, தற்காலிக கடைகள் அமைக்க உள்ள இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வியாபாரம் தொடங்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.