ஈரோட்டில் ஒரேநாளில் 108 மி.மீட்டர் மழை கொட்டியது; ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 108 மி.மீட்டர் மழை கொட்டியதால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 108 மி.மீட்டர் மழை கொட்டியதால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கொட்டிய மழை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 25-ந் தேதி மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
இதுபோல் நேற்று முன்தினம் மாலையும் சாரலாக தொடங்கிய மழையானது தொடர்ந்து நீடித்தது. இரவு வரை விடாமல் கொட்டித்தீர்த்த மழையால் ஈரோடு மாநகர பகுதி முற்றிலும் வெள்ளக்காடானது.
சாலைகளில் வெள்ளம்
திண்டல், செங்கோடம்பாளையம், வில்லரசம்பட்டி, நசியனூர் ரோடு, பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பஸ் நிலையம், அகில்மேடு வீதி, அரசு ஆஸ்பத்திரி-பன்னீர்செல்வம் பூங்கா ரோடு, காந்திஜி வீதி, நேதாஜி ரோடு, மரப்பாலம், காளைமாடு சிலை, ரெயில்வே மேம்பாலம், சென்னிமலை ரோடு, ரெயில் நிலையம், கொல்லம்பாளையம், நாடார் மேடு, அண்ணமார் பெட்ரோல் பங்க், வ.உ.சி.பூங்கா காய்கறி சந்தை, ஆர்.கே.வி. ரோடு, ஈ.வி.என். ரோடு, கே.என்.கே. ரோடு, நீரேற்று நிலையம் ரோடு, வீரப்பன்சத்திரம் என்று மாநகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் சாலைகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் காட்டாறு போல ஓடியது. வழக்கம்போல மழை பெய்த சில நிமிடங்களிலேயே பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து மழை நீரும் கழிவு நீரும் சாலைகளில் கொப்பளித்து சென்றன. பழையபாளையம்- குமலன்குட்டை இடையே பெருந்துறை ரோட்டில் தண்ணீர் குளம்போல தேங்கியது.
பன்னீர்செல்வம் பூங்கா செல்லும் வழியில் மேம்பாலத்தை ஒட்டி சுமார் 2 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அங்குள்ள மழை நீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால், சாக்கடையுடன் கலந்த தண்ணீர் சாலையில் பாய்ந்தது. காந்திஜி ரோட்டில் வெள்ளம் காட்டாறு போல ஓடியது. தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பெரும்பள்ளம் ஓடை பாலத்தில் ஒரு அடிக்கும் மேல் வெள்ளம் குட்டையாக தேங்கியது. ரெயில்வே நுழைவு பாலம், கொல்லம்பாளையம் திருப்பம் பகுதிகளிலும் தண்ணீர் பெருமளவு தேங்கியது.
கட்டிடம் இடிந்தது
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள், பாதாள சாக்கடை தொட்டி மூடிகளில் சிக்கி தடுமாறினார்கள். கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி அணைந்து இயக்க முடியாமலும் பாதிப்படைந்தது. மழை இரவிலும் கொட்டியதால் அலுவலகங்கள், கடைகளில் இருந்து வேலை முடிந்து திரும்பியவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்த பெருமழையால் ஈரோட்டில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 108 மி.மீட்டர் மழை கொட்டியதாக பதிவாகி உள்ளது. இந்த மழையால் ஈரோடு மண்டபம் வீதியில் ஒரு பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
ஓடைகளில் வெள்ளம்
நேற்று காலை சாலைகளில் இருந்து தண்ணீர் வடிந்திருந்தது. சில இடங்களில் மட்டும் தண்ணீர் குட்டை போல தேங்கியது. பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, கொல்லம்பாளையம் ஓடை, மாநகர் பகுதியில் உள்ள பெரிய மழை நீர் வடிகால்கள், சாக்கடை கால்வாய்களில் நேற்றும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
சூளை பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை ஒட்டிய வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஈரோடு ரெயில் நிலைய பயணச்சீட்டு முன்பதிவு மையத்திலும் வெள்ளம் குளம்போல தேங்கியது. பி.பி.அக்ரகாரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் வயல்களில் வெள்ளம் குளம்போல தேங்கியது. வைராபாளையம் நீரேற்று நிலைய தொட்டிகள் மறையும் அளவு தண்ணீர் தேங்கியது. காவிரியிலும் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில்....
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்தது. பவானிசாகர், பவானி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, நெரிஞ்சிப்பேட்டை, கொடுமுடி, ஊஞ்சலூர், கருமாண்டம்பாளையம், கொளாநல்லி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அனைத்து இடங்களில் மாலை 6.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் நிற்காமல் பெய்தது. அதன்பின்னர் விட்டு விட்டு நேற்று அதிகாலை வரை மிதமாக பெய்துகொண்டே இருந்தது.
இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் விவசாய தோட்டங்களில் மழை தண்ணீர் தேங்கி இருந்தது.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவானமழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
ஈரோடு-108
பவானி-64
பவானிசாகர்-34.2
மொடக்குறிச்சி-31
கவுந்தப்பாடி-26.4
வரட்டுப்பள்ளம்-20.4
எலந்தைகுட்டை மேடு-17.8
குண்டேரிபள்ளம்-14
பெருந்துறை-13
தாளவாடி-11.2
அம்மாபேட்டை-11
கோபி-10
கொடுமுடி-8.20
நம்பியூர்-7
கொடிவேரி-7
சென்னிமலை-7
சத்தியமங்கலம்-6
மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது.