ஈரோட்டில் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்
ஈரோட்டில் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.
ஈரோட்டில் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.
குறைதீர்க்கும் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். பிறகு மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
இதில் வேலை வாய்ப்பு, மருத்துவ வசதிக்கான உதவி, பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனம், பட்டா, குடிநீர் வசதி, அடையாள அட்டை, வங்கி கடன் உதவி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 116 மனுக்கள் பெறப்பட்டன.
நலத்திட்ட உதவிகள்
மேலும், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பிலான 3 சக்கர மிதிவண்டி, பார்வையற்றவர்கள் 2 பேருக்கு தலா ரூ.4 ஆயிரத்து 500 மதிப்பிலான 2 பிரெய்லி கடிகாரம், 2 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.13 ஆயிரம் மதிப்பிலான செல்போன், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரத்து 300 மதிப்பிலான எழுத்தை பெரிதாக்கி காட்டும் கருவி என மொத்தம் 17 பேருக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேசிய அளவிலான அடையாள அட்டை, தடையற்ற சூழல், சமவாய்ப்பு கொள்கை உள்ளிட்டவை தொடர்பான மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடந்தது.
இந்த முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைசெல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.