ஈரோட்டில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது; சரண் அடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை
ஈரோட்டில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
ஈரோட்டில் டாஸ்மாக் கடை முன்பு நடந்த வாலிபர் கொலையில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சரண் அடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாலிபர் கொலை
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் அம்பேத்கர். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 29). தொழிலாளி. இவருடைய மனைவி ஆசிம். சந்தோஷ் கனிராவுத்தர்குளம் காந்திநகர்ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு கடந்த 30-ந் தேதி மது குடிப்பதற்காக சென்றார். பின்னர் மது அருந்திவிட்டு வெளியே வந்த சந்தோஷை 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.
இதில் முக்கிய கொலையாளியான சித்தோட்டை சேர்ந்த ஜின்னா (36) என்பவரும், அவருடைய நண்பருமான ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகியோர் கடந்த 31-ந் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை பிடிக்க ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சோமசுந்தரம், தெய்வராணி, முருகன் ஆகியோர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் சந்தோஷ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஈரோடு சத்திரோடு சின்னசேமூரை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் என்பவரின் மகன் ரியாஜ் சித்திக் (34), பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் ராணாநகரை சேர்ந்த மனோஜ்குமார் (37), கனிராவுத்தர்குளம் எல்லப்பாளையம் சக்திநகரை சேர்ந்த சதீஷ்குமார் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய புள்ளியாக ஜின்னா இருந்து வருவதால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஜின்னாவையும், மணிகண்டனையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக கோர்ட்டில் மனுவை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொலைக்கான காரணம்
கொலை செய்யப்பட்ட சந்தோஷ் மீது வழிப்பறி, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ளன. இதேபோல் சரண் அடைந்த ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. நண்பர்களான இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதன் காரணமாக கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
எனவே ஜின்னாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகே, முன்விரோதம் காரணமாக சந்தோஷ் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஜின்னாவும் அவரது நண்பர்களும் சந்தோஷை கொலை செய்தனரா? எதற்காக முன்விரோதம் ஏற்பட்டது? போன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.