ஈரோட்டில்தமிழ்நாடு தின விழிப்புணர்வு ஊர்வலம்


ஈரோட்டில்தமிழ்நாடு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

ஈரோட்டில் தமிழ்நாடு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோட்டில் தமிழ்நாடு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு தின விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பெருந்துறைரோடு வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

கண்காட்சி

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தின விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். வருகிற 23-ந் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. தொடர்ந்து மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுவினர் 28 பேருக்கு ரூ.2 கோடியே 31 லட்சம் கடன் உதவியை வழங்கினார். மேலும், பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர்கள் பழனிசாமி, சுப்பிரமணியம், சசிகுமார், மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தை ராஜன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி க.செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story