ஈரோட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.40-க்கு விற்பனை


ஈரோட்டில்  தக்காளி விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.40-க்கு விற்பனை
x

ஈரோட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை ஆனது.

ஈரோடு

ஈரோட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை ஆனது.

தக்காளி விலை உயர்வு

ஈரோடு, வ.உ.சி. பூங்கா வளாகத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது.

இங்கு, ஈரோடு மாவட்டம் தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்தாகும். தினந்தோறும் 8 டன் முதல் 10 டன் வரை தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்வதால், தக்காளி விளைச்சல் பாதித்து, வரத்து குறைந்தது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ரூ.40-க்கு விற்பனை

இந்த நிலையில் ஈரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு நேற்று 5 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரூ.10-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ தக்காளி நேற்று விலை உயர்ந்து ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது. இதுகுறித்து தக்காளி வியாபாரிகள் கூறும்போது, 'தொடர் மழை காரணமாக தக்காளி பழங்கள் செடிகளிலேயே அழுகி விடுகிறது. மேலும் தக்காளிகளை பறித்து வருவதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளது.

இதன் காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 8 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்தான நிலையில் தற்போது 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே தக்காளி வரத்தாகிறது. இதனால் 25 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ஒன்று ரூ.750 முதல் ரூ.800 வரை விற்பனை ஆகிறது. மேலும் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது' என்றனர்.


Next Story