இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு


இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
x

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வருகை தந்து, ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் பக்தர்கள் வருகை தந்து செல்கிறார்கள். இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திட்ட பணியை துறை செயலாளர் மேற்பார்வையில் துறையினுடைய ஆணையாளர் மற்றும் கூடுதல் ஆணையர்கள் அதிக கவனம் செலுத்தி பெருந்திட்ட வரைவை முதற்கட்டமாக தயாரித்து இருக்கின்றார்கள். அதை இன்றைக்கு துறை செயலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோருடன் பார்வையிட்டு இருக்கின்றோம்.

குறிப்பாக இந்த பெருந்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்களாக 3 இடங்களில் நுழைவாயில்களை ஏற்படுத்த இருக்கின்றோம். முக்கிய பாதையில் இருந்து கோவிலுக்கு வருகின்ற பாதை 600 மீட்டர் அளவிற்கு புதிய பாதையை அமைக்க இருக்கின்றோம். வரும் வழியில் இருக்கின்ற தரைமட்ட பாலம் உயர் மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது.

இங்கு 98 விருந்து மண்டபங்கள், ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்த வருகின்றவர்களுக்கு சுகாதாரமான முறையில் இரண்டு ஸ்லேட்டர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொங்கல் இடும் வகையில் பொங்கல் மண்டபமும், பக்தர்கள் தங்குவதற்கு 40 குளிர்சாதன அறைகளும், 40 குளிர்சாதன மற்ற அறைகளும் அமைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற நிலையில் உள்ள கோவில்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை நிச்சயம் மாற்றிக் காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story