கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.35¼ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.35¼ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,811 மூட்டைகளில் நாட்டு் சர்க்கரையை கொண்டுவந்தனர்.
இதில் 60 கிலோ மூட்டை முதல் தர திடம் ரக நாட்டு சர்க்கரை 2 ஆயிரத்து 420 ரூபாய்க்கும், மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,474 மூட்டைகளில் உள்ள 88 ஆயிரத்து 440 கிலோ எடையுள்ள நாட்டுச்சர்க்கரை 35 லட்சத்து 12 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல் பொங்கல் மற்றும் பிரசாதம் தயாரிப்பதற்கான உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் முதல் ரகம் ஒரே விலையாக 1,350 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 58 மூட்டைகளில் உள்ள 1,740 கிலோ எடையுள்ள உருண்டை வெல்லம் 78 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையானது.
மொத்தம் 1,532 மூட்டைகளில் உள்ள நாட்டுச்சர்க்கரை, உருண்டை வெல்லம் 35 லட்சத்து 90 ஆயிரத்து 540 ரூபாய்க்கு பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் சார்பில் கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.