கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நேற்று கிராமமக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 80 பெண்கள் உள்பட 128 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியேறும் போராட்டம்
பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து பெரியார் நகரில் 350 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 150 குடியிருப்புகளுக்கு மட்டும் பஞ்சாயத்து நிர்வாகம் தீர்வை ரசீது வழங்கி உள்ளது. இந்த ரசீது பெற்றவர்கள் மின் இணைப்பு பெற்றுள்ளனர். மீதி உள்ள 200 குடியிருப்புகளுக்கு தீர்வை ரசீது வழங்காததால் மின் இணைப்பு பெற முடியாமல், குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருவதாகவும், இந்த வீடுகளுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் தீர்வை ரசீது வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலையில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் தாலுகா செயலாளர் ஜி. பாபு தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், வக்கீல் ரஞ்சனி கண்ணம்மா, நகர துணை செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் மற்றும் பாண்டவர்மங்கலம் பெரியார் நகர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் சமையல் பாத்திரங்கள், அடுப்பு, எரிபொருட்களுடன் அலுவலக வளாகத்தில் குவிந்திருந்தனர்.
128 பேர் கைது
இதை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததாலும், பஞ்சாயத்து யூனியன் அலுவலக பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக்கூறி போராட்டத்தில் பங்கேற்ற 80 பெண்கள் உள்பட 128 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த போராட்டத்தால் யூனியன் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.