குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சோனைமுத்து கருப்பண்ண சாமிக்கு மதுபான படையல்
சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சோனை முத்து கருப்பண்ணசாமிக்கு மதுபான படையல் நடந்தது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடி திருவிழா, கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சோனைமுத்து கருப்பண்ண சாமிக்கு மதுபான படையல் நேற்று நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை சாமிக்கு படையலிட்டனர். இதைத்தொடர்ந்து 25 கிடா மற்றும் 45 சேவல்கள் சாமிக்கு பலியிடப்பட்டது. பின்னர் அவை சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.