நல்லமங்காபாளையத்தில்பொல்லான் மணிமண்டபம் அமைக்க வேண்டும்கலெக்டரிடம், சமூகநீதி மக்கள் கட்சியினர் மனு
நல்லமங்காபாளையத்தில் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம், சமூகநீதி மக்கள் கட்சியினர் மனு அளித்தனா்.
சமூகநீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல்ராமன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்க மாவட்ட வருவாய் துறையினர், வடுகப்பட்டி கிராமத்தில் 2 ஏக்கரும், ஜெயராமபுரத்தில் 41 சென்ட் நிலமும் தேர்வு செய்தனர். மேற்கண்ட இடங்கள் தீரன் சின்னமலை மணி மண்டபம் அமைந்துள்ள ஓடாநிலைக்கு மிக அருகில் உள்ளது. இதனால் மாற்று சமூகத்தினர் மேற்கண்ட இடங்களில் பொல்லான் மணிமண்டபம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாவீரன் பொல்லான் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது இரு சமூகத்தினருக்கிடையே பிரச்சினை மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அருந்ததியர் சமூக மக்கள் குடியிருக்கும் பகுதியான குறிப்பாக பொல்லான் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான வரலாற்றில் இடம் பெற்றுள்ள அறச்சலூர் நல்லமங்காபாளையத்தில் 2 ஏக்கர் மந்தை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை நத்தம் புறம்போக்கு நிலமாக வகை மாற்றம் செய்து பொல்லான் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.