சித்தோடு அருகே இரவில் தேசிய நெடுஞ்சாலையில் உருவான ராட்சத பள்ளத்தில்சிக்கி மோட்டார்சைக்கிளில் சென்றவர் படுகாயம்
சித்தோடு அருகே இரவில் தேசிய நெடுஞ்சாலையில் உருவான ராட்சத பள்ளத்தில் சிக்கி மோட்டார்சைக்கிளில் சென்றவர் படுகாயம் அடைந்தார்.
பவானி
சித்தோடு அருகே இரவில் தேசிய நெடுஞ்சாலையில் உருவான ராட்சத பள்ளத்தில் சிக்கி மோட்டார்சைக்கிளில் சென்றவர் படுகாயம் அடைந்தார்.
பள்ளத்தில் சிக்கி படுகாயம்
பவானி அருகே உள்ள சித்தோடு தாய் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு 11 மணி அளவில் தனது மோட்டார்சைக்கிளில் கவுந்தப்பாடியில் இருந்து சித்தோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சித்தோடு அருகே வாய்க்கால் மேடுவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ரோட்டில் உருவாகியிருந்த ராட்சத பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் சிக்கியதில் வெங்கடேசன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அதிகாரிகள்
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் இதுசம்பந்தமாக உடனடியாக ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு்ள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அதிகாரிகள் கூறும்போது, 'அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்தப் பகுதியில் மழைநீர் தேங்கியதால் ரோட்டில் ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. மேலும் நெடுஞ்சாலை துறை சார்பில் உடனடியாக சாலை சீரமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.
போக்குவரத்து மாற்றம்
இதனைத்தொடர்ந்து போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. ரோட்டில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு கோபியில் இருந்து அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் சித்தோடு சென்று சித்தோட்டில் இருந்து ஆவின் வழியாக செல்லுமாறு திருப்பி விடப்பட்டன.
ராட்சத பள்ளத்தால் சித்தோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 35 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.