ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு கோடைகாலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க உத்தரவு


ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு கோடைகாலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க உத்தரவு
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தற்போது கோடை காலம் என்பதால் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தந்தார்.

அப்போது, மாவட்ட எல்லையான திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் மாவட்ட கலெக்டர் பழனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் விஷ்ணுபிரசாத் எம்.பி. ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அவர்களை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு

இவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து விழுப்புரத்துக்கு தனது வாகனத்தில் புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், செல்லும் வழியில் திண்டிவனம் அருகே ஒலக்கூரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்வதற்காக திடீரென அங்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த கோப்புகளை அவர் பார்வையிட்டார். பின்னர், ஒன்றிய அலுவலர்களிடம் தற்போது கோடை காலம் என்பதால் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி குடிநீர் கிடைத்திட தக்க முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தில் நடந்து வரும் பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தாமதமின்றி ஊதியம்

அதோடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள 52 ஊராட்சிகளிலும் வேலை நடப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும், அத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை தாமதமின்றி உடனுக்குடன் வழங்கிட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இத்திட்டத்தின் பதிவேடுகளை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்ட அவர், திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் பெயர், வேலை செய்யும் நாட்கள், வழங்கப்படும் ஊதியம் ஆகியன குறித்த விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதேபோன்று, கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில், வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீடுகளை கட்டித்தர வேண்டும் என்றும், மேலும் இத்திட்டத்தில் நடந்து வரும் பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்திட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது ஒலக்கூர் ஒன்றிய குழு தலைவர் சொக்கலிங்கம், துணை தலைவர் ராஜாராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராமதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story