பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலமிட்ட ஊழியர்கள்


பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலமிட்ட ஊழியர்கள்
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் போராட்டத்தால் பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலமிடப்பட்டது.

கன்னியாகுமரி

தக்கலை,

பொதுமக்களின் போராட்டத்தால் பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலமிடப்பட்டது.

பத்மநாபபுரம் அரண்மனை

குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையை கேரள அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை பராமரித்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஓணம் விழா கொண்டாடுவது வழக்கம். முதல் நாளில் கேரள பாரம்பரிய முறைப்படி அரண்மனை வளாகத்தில் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு, ஊஞ்சல் கட்டுவார்கள்.

அது போல் ஓணத்திற்கு முந்தைய 3 நாட்கள் அரண்மனை கட்டிடத்தை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள். மேலும் அரண்மனை ஊழியர்களை மகிழ்விப்பதற்காக விளையாட்டு போட்டிகள் நடத்தி ஓண சத்யா என்ற அறுசுவை விருந்தளிப்பார்கள்.

ஓணம் விழா ரத்து

இந்த விழாவை உள்ளூர் பொதுமக்கள் கண்டு ரசிப்பதற்காக வழக்கமாக 6 மணிக்கு அடைக்கப்படும் அரண்மனை முன்வாசல் 3 நாட்கள் மட்டும் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இதனால் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வரும்பொதுமக்கள் மின்னொளியில் ஜொலிக்கும் அரண்மனையின் அழகை ரசித்தவாறு ஊஞ்சலில் அமர்ந்து ஆடி மகிழ்வார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஓண விழாவை இந்த ஆண்டு நடத்துவதற்கு கேரள அரசு நிதி ஒதுக்கவில்லை என கூறி அரண்மனை நிர்வாகத்தினர் ஓணம் விழாவை ரத்து செய்தனர். இதனால் அரண்மனை களை இழந்து காணப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

அரண்மனையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் மூலம் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்துவரும் நிலையில் ஓணம் விழாவை நடத்த அரசிடம் பணம் இல்லை என்று கூறுவது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பிய உள்ளூர் பொதுமக்கள் நேற்று முன்தினம் அரண்மனை முன்வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் அரண்மனை நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அரசு நிதி ஒதுக்காததால் விழா நடத்த முடியவில்லை. அடுத்த ஆண்டு வழக்கம்போல் விழா நடத்தப்படும் என்றும், தற்போது 3 நாட்கள் மட்டும் அத்தப்பூ கோலமிட்டு, ஊஞ்சல் அமைத்து பொதுமக்கள் வசதிக்காக இரவு வரை முன்வாசல் திறந்துவைக்கப்படும் என்றும் அரண்மனை நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அத்தப்பூ கோலம்

அதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் நேற்று பெண் ஊழியர்கள் அத்தப்பூ கோலமிட்டனர். அதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

அதே சமயம் ஊஞ்சல் கட்டப்படும். இரவில் உள்ளூர் பொதுமக்கள் குழந்தைகளோடு அரண்மனைக்கு வந்து ஊஞ்சலில் அமர்ந்து ஆடி மகிழலாம் என்று அரண்மனை நிர்வாகத்தினர் கூறி இருந்தனர். ஆனால் ஊஞ்சல் கட்டப்படவில்லை. நேற்று மாலை 5 மணிக்கே அரண்மனையின் கதவை மூடிவிட்டு சென்று விட்டனர். இதனால் அந்தப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story