ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவிலில்பங்குனி திருவிழா தொடங்கியது
ராமநாதபுரத்தில் புகழ்பெற்ற வழிவிடுமுருகன் கோவிலில் பங்குனி உத்திரபெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரத்தில் புகழ்பெற்ற வழிவிடுமுருகன் கோவிலில் பங்குனி உத்திரபெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வழிவிடுமுருகன் கோவில்
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வழிவிடுமுருகன் கோவில். ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி உத்திரபெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ராமநாதபுரம் நகரில் நடைபெறும் விழாக்களில் இந்த பங்குனி உத்திர பெருவிழா மிக முக்கிய விழா என்பதால் நகர்ப்பகுதி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
இந்த கோவிலின் 83-வது பங்குனி உத்திரபெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலில் அமைந்துள்ள கொடிகம்பத்தில் விழாவையொட்டி கொடி ஏற்றப்பட்டு முருகப் பெருமானுக்கு பல்வேறு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
பக்தர்கள் காப்பு கட்டினர்
தொடர்ந்து பங்குனி உத்திர பெருவிழாவில் விரதம் இருந்து காவடி, பால்குடம் எடுக்கும் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் காப்புகட்டி விரதம் தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு காப்புகட்டி கொண்டனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நாள்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறும். நாள்தோறும் கோவில் வளாகத்தில் சொற்பொழிவுகள், பரதநாட்டியம், வாரவழிபாடு, பக்தி இன்னிசை, சிலம்பாட்டம், இசை சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 5-ந் தேதி பங்குனி உத்திர பெருவிழா நடைபெறுகிறது.
காவடி எடுத்து ஊர்வலம்
அன்றையதினம் விரதம் இருந்துவரும் பக்தர்கள் நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து வந்து முருகன் கோவிலில் செலுத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அன்றைய தினம் இரவு கோவில் முன்புறம் பிரமாண்டமான பூக்குழி இறங்கும் பக்திபரவச நிகழ்ச்சி நடைபெறும்.
பங்குனி உத்திர பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஜெயக்குமார் தலைமையில் விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.