சாலைப்புதூரில் ரெயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி சாவு
சாலைப்புதூரில் ரெயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறநது போனார்.
சாலைப்புதூர்:
கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் பெத்தேல் ஹோம் ரயில்வே தண்டவாள பகுதியில் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிணாக கிடந்தவர் கோவில்பட்டி அடுத்துள்ள இனாம் மணியாச்சி புது காலனி சுப்பையா மகன் காளிமுத்து (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரருடன் சேர்ந்து கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார் என்பது தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தைக் கடக்கும் போது அடிபட்டு இறந்தாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.