ஸ்ரீவைகுண்டம் கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா
ஸ்ரீவைகுண்டம் கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை எதிரே தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வளர்ந்த வீடு அரசு வட்டாரகிளை நூலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா மற்றும் புத்தக கண்காட்சி நடைபெற்றது. நூலகத்தில் அமைந்துள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவரும், கலைமகள் யோகா மாஸ்டருமான இசக்கிமுத்து தலைமை தாங்கினார். நல்லாசிரியர் விருது பெற்ற குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாணிக்கம், குமரகுருபரர் சுவாமிகள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி, ஆதி குமரகுருபரர் பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியை விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். நூலகர் கண்ணன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்துபேசினார். இதனை தொடர்ந்து பேச்சுபோட்டி, கவிதைபோட்டி, யோகா, விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாசில்தார் பரிசுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து ஆசிரியர் மாணிக்கம், தாசில்தார் ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி நூலகத்தில் புரவலராக சேர்ந்தனர்.
விழாவில் நூலகர்கள் கண்ணன், நூலக உதவியாளர்கள் இசக்கிதுரை, விஜயகுமார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.