புனித சவேரியார் பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி


புனித சவேரியார் பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
x

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயர் நசரேன் சூசை பங்கேற்றார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயர் நசரேன் சூசை பங்கேற்றார்.

பெரிய வியாழன்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும் முன்பு முந்தைய தினம் இரவு தனது சீடர்களுடன் பந்தி அமர்ந்து உணவு உண்டார். அப்போது அவர் தனது இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை கழுவி துடைத்தார். ெதாடர்ந்து அவர் நற்கருணையை நிறுவினார்.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.

ஆயர் நசரேன் சூசை

நிகழ்ச்சிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார். பின்னர் சிறுவர், சிறுமிகள் மற்றும் அருட்சகோதரிகள் உள்பட மொத்தம் 12 பேரின் பாதங்களை தொட்டு கழுவினார். தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதுபோல் குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, சிலுவை பாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.


Next Story