டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்டு ஊழியரை தாக்கிய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்டு ஊழியரை தாக்கிய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனம் காவேரிப்பாக்கம் சின்னவீரராகவன் தெருவை சேர்ந்தவர் அண்ணாத்துரை மகன் வெங்கடேஷ் என்கிற சரத் (வயது 30). இதேபோல் திண்டிவனம் கிடங்கல்-2 ராஜன் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் அஜய்ராஜ் (22). இவர்கள் மீது திண்டிவனம் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த 6.11.2022 அன்று திண்டிவனத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்து அங்கிருந்த டாஸ்மாக் ஊழியரை இரும்புக்கம்பியால் தாக்கிய வழக்கில் வெங்கடேஷ், அஜய்ராஜ் ஆகிய இருவரையும் திண்டிவனம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
தொடர்ந்து, அவர்கள் இருவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் வெங்கடேஷ், அஜய்ராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.
இதையடுத்து வெங்கடேஷ், அஜய்ராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.