இறைச்சி கடைக்காரர் வீட்டில்2 ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் கடத்தல்
ஆறுமுகநேரியில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் 2 ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் கடத்திய இரண்டு வாலிபர்கள் சிக்கினர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் 2 ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 2 ஆடுகள் மீட்கப்பட்டது.
இறைச்சி கடைக்காரர்
ஆறுமுகநேரி பாரதி நகர் கீழத்தெருவை சேர்ந்த அழகுவேல் நாடார் மகன் கோட்டாளம் (வயது 55). இவர் ஆறுமுகநேரி பாரத ஸ்டேட் வங்கி அருகே இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவர் இறைச்சி வியாபாரத்திற்காக பல ஆடுகளை வாங்கி வீட்டிற்கு பின்னால் கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார்
நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் குடும்பத்தினருடன் கோட்டாளம் தூங்கிகொண்டிருந்த நிலையில், வீட்டுக்கு பின்புறம் கட்டியிருந்த ஆடுகள் சத்தம் போட்டுள்ளன. இந்த சத்தத்தை கேட்டு கண்விழித்த கோட்டாளமும், அவரது மனைவியும் வீட்டுக்கு பின்னால் சென்று பார்த்துள்ளனர்.
ஆடுகள் திருட்டு
அப்போது 2 ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் ஏற்றியுள்ளனர். இதை பார்த்து கோட்டளமும், அவரது மனைவியும் கூச்சல் போட்டவுடன், அந்த மர்ம நபர்கள் திருடிய ஆடுகளுடன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
சிறிது தூரம் 2 பேரும் ஓடியும், அவர்களை பிடிக்க முடியாமல் போனது. அதேசமயம் மர்ம நபர்களின் மோட்டார் சைக்கிள் எண்ணை குறித்து வைத்து கொண்டு ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் கோட்டாளம் புகார் செய்தார். இது தொடர்பாக சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
வாலிபர்கள் சிக்கினர்
இந்த நிலையில், நேற்று காலையில் ஆறுமுகநேரி கடலோர போலீஸ் சோதனை சாவடி அருகே ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்பொழுது ஆடுகளை கடத்திச் சென்ற மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். போலீசாரின் தொடர் விசாரணையில், கோட்டாளம் வீட்டில் 2 ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது அவர்கள் தான் என்பதும், அவர்கள் காமராஜபுரம் கீழத்தெரு சிம்சன் மகன் சாமுவேல் (22), அதே பகுதியில் வசிக்கும் விவேகானந்தன் மகன் மணி வேல்(22) என்பதும் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
அந்த 2 பேரும் ஆறுமுகநேரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த போலீசார் இருவரையும் கைது செய்து 2 ஆடுகளையும் மீட்டனர். பின்னர் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.