நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 400 கோணிப்பைகள் எரிந்து சாம்பல்
மருதாடு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின்கசிவு காரணமாக 400 கோணிப்பைகள் எரிந்து சாம்பல் ஆனது.
வந்தவாசி
மருதாடு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின்கசிவு காரணமாக 400 கோணிப்பைகள் எரிந்து சாம்பல் ஆனது.
நெல் கொள்முதல் நிலையம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகளிடம் பெறப்பட்ட சுமார் 4 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நெல் மூட்டைகளுக்கு அருகில் புதிதாக 700 கோணிப்பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை நேரடி கொள்முதல் நிலையத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதில் 400 கோணி பைகள் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது.
நெல் மூட்டைகள் தப்பியது
தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த கோணிப்பைகளை அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் ஓடி வந்து உடனே வெளியே எடுத்து வந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இந்த சம்பவம் ஆட்கள் இல்லாத நேரத்தில் நடந்திருந்தால் அனைத்து கோணி பைகளும் எரிந்து சாம்பலாயிருக்கும்.
மேலும் பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4 ஆயிரம் நெல் மூட்டைகளும் எரிந்து நாசமடைந்திருக்கும். ஊழியர்களும், விவசாயிகளும் அங்கு இருந்ததால் நெல் மூட்டைகள் அனைத்தும் தப்பியது. நெல் மூட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறினர்.
இதுகுறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கீழகொடுங்காலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.