குளச்சல் நகராட்சி கூட்டத்தில் தெருவுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக கவுன்சிலர்கள் காரசார விவாதம்


குளச்சல் நகராட்சி கூட்டத்தில்  தெருவுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக கவுன்சிலர்கள் காரசார விவாதம்
x

குளச்சல் நகராட்சி கூட்டத்தில் தெருவுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடந்ததையொட்டி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சல் நகராட்சி கூட்டத்தில் தெருவுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடந்ததையொட்டி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

நகராட்சி கூட்டம்

குளச்சல் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் நசீர் (தி.மு.க.) தலைமையில் நடந்தது. ஆணையர் (பொறுப்பு) ஜீவா, மேலாளர் பிரேமா, துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

ரகீம் (தி.மு.க.):- முன்னாள் நகராட்சி தலைவர் வி.கே.கிருஷ்ணபிள்ளை வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெரு பெயரை வி.கே.பி.தெரு என்று பெயர் சூட்டுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் ஜேசையா, எம்.ஏ.ஜேம்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. முகமது இஸ்மாயில் ஆகியோர் பெயர்களும் அவர்களது தெருவுக்கு சூட்ட வேண்டும்.

தலைவர்:- சாலை, தெரு பெயர்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்ட விரும்பினால் தமிழக அரசின் அனுமதி பெற்றுதான் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரகீம்:- நான் கூறிய பெயர்களை சேர்த்த பின்பு, இந்த பெயரையும் சேர்த்து கொள்ளலாம்.

ஒத்திவைப்பு

தொடர்ந்து இதுதொடர்பாக கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இதனால், மேற்கொண்டு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்கவில்லை. இதனால், கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தலைவர் நசீர் அறிவித்தார்.

கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது குறித்து நகராட்சி தலைவர் நசீர் கூறியதாவது:-

நகர்மன்ற தலைவரின் முன் அனுமதி பெற்று குடிநீர், தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய பணிகளை செய்யலாம். கவுன்சிலர்கள் தீர்மானங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு தராவிட்டால் வார்டுகளில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story