கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு
கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு நடத்தினார்.
எட்டயபுரம்:
கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜீ.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது பழுதடைந்த கட்டடங்கள் புனரமைத்தல், ஆண்கள் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளி நோயாளிகளுக்கு நவீன சுகாதார வளாகம் உருவாக்குதல், மருத்துவமனை முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் கிடைத்திடும் வகையில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்துதல், எக்ஸ்ரே மற்றும் ரத்த அணுக்கள் எண்ணிக்கை கண்டறியும் கருவி நிறுவுவது, ஆம்புலன்ஸ் வாகனத்தில் உயிர்காக்கும் கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுத் பணிகள் தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உரிய திட்ட அறிக்கை தயார் செய்து வழங்கவும், அதனைத் தொடர்ந்து உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பல்வேறு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மேம்பாட்டு பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். ஆய்வின் போது கோவில்பட்டி தி.மு.க ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
இதேபோன்று விளாத்திகுளம்அருகே கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலத் தொகுப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்தது
தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தலைகாட்டுபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக வேளாண்மை உதவியாளர் நாச்சியார் அம்மாள், விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி தலைகாட்டுபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பச்சை பெருமாள் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்