தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உப்பள தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உப்பள தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
வைப்பார் அருகேயுள்ள துலக்கன்குளம் உப்பளத் தொழிலாளர்கள் தொழில் செய்து வரும் நிலத்துக்கு பட்டா வழங்க கோரி நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
விளாத்திகுளம் தாலுகா வைப்பார் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த உப்பளத் தொழிலாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், துலுக்கன்குளம் கிராமத்தில் சுமார் 150 ஆதிதிராவிடர் குடும்பத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் இந்த பகுதியில் உள்ள 150 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தன்பாடு உப்பளத் தொழில் செய்து வருகிறோம். இந்த வருமானத்தை கொண்டு தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
பட்டா வழங்க கோரிக்கை
இந்த நிலத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு வரை அரசு விதிக்கும் தண்ட தீர்வையை செலுத்தி வந்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக தண்ட தீர்வை ரசீது வழங்குவதை வருவாய் துறையினர் நிறுத்திவிட்டதால் எங்களால் தீர்வை செலுத்த இயலவில்லை. எங்கள் வாழ்வாதாரம் இந்த நிலத்தை சார்ந்து தான் உள்ளது. எனவே, அந்த நிலங்களை அனுபவித்து வரும் 150 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். பின்னர் அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.