தூத்துக்குடி உழவர் சந்தையில் விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகள் அணுகலாம்
தூத்துக்குடி உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய அணுகலாம் என்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் ச.நடராஜன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய அணுகலாம் என்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் ச.நடராஜன் தெரிவித்து உள்ளார்.
உழவர் சந்தை
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகளை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த உழவர் சந்தையில் மொத்தம் 80 கடைகள் உள்ளன. இதில் 40 கடைகளில் மட்டுமே விவசாயிகள் தங்கள் விளை பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆய்வு
இந்த நிலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் ச.நடராஜன் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் நடத்தப்படும் மலை காய்கறிகள் கடைகள் மற்றும் விவசாய ஆர்வலர் குழுக்கள் மூலம் நடத்தப்படும் மதிப்பு கூட்டு பொருட்கள் கடைகளை ஆய்வு செய்தார். விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் தூத்துக்குடி உழவர் சந்தையில் வீணாகும் கழிவு காய்கறிகளை உரமாக மாற்றுவதற்கான எந்திரம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உழவர் சந்தையில் உள்ள கடைகளில் வைத்து விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு, உழவர் சந்தை நிர்வாக அலுவலரை அணுகலாம். அவரை அணுகி உரிய ஆவணங்கள் கொடுத்து அடையாள அட்டையை பெறலாம் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கா.முருகப்பன், வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.