விருத்தாசலம் நகராட்சி கூட்டத்தில்அதிமுக, திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
விருத்தாசலம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் நகர மன்ற அவசர கூட்டம் தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் சேகர் வரவேற்றார்.
கூட்டத்தில் நகராட்சியின் வரவு-செலவு கணக்குகள் கவுன்சிலர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினர். அதன் விவரம் வருமாறு:-
குடிநீர் வரி உயர்வு
சந்திரகுமார்(அ.தி.மு.க.):- குடிநீர் வரி உயர்வை ரத்து செய்ய முடியுமா? முடியாதா?
நகராட்சி பொறியாளர் சிவசங்கரன்:- அருகிலுள்ள நகராட்சிகளை விட குடிநீர் வரி குறைவாகத்தான் வசூலிக்கப்படுகிறது.
சந்திரகுமார்(அ.தி.மு.க.):- குடிநீர் வரியை குறைக்காததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்கிறோம் என கூறிவிட்டு சந்திரகுமார் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அருண், ராஜேந்திரன், பிரியா, அழகு பிரியா உள்ளிட்ட கவுன்சிலர்கள் தமிழக அரசையும் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர். சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் மீண்டும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
வாக்குவாதம்
சிங்காரவேல்(பா.ம.க.):- திராவிட மாடல் ஆட்சி, நல்லாட்சி என்று கூறுகிறீர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் எனது வார்டில் நான் கொடுத்த 35 கோரிக்கைகளில் எதையும் நிறைவேற்றவில்லை.
அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் ஆட்சி சரியில்லை என்று கூறாதீர்கள். 10 ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் என்ன செய்தார்கள்? என்றார். உடனே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி பொறியாளர்:- சொத்து வரியை கட்டினால் குடிநீர் இணைப்பு ஒரு வாரத்தில் கொடுக்கப்படும். தெரு மின்விளக்குகள் அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்மோட்டார் அமைக்கவில்லை
ராஜ்குமார்(தே.மு.தி.க.) :- எம்.ஆர்.கே. நகரில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மின்மோட்டார் அமைத்துக் கொடுக்கவில்லை. நகராட்சி பொது நிதியில் மட்டுமே வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசிடம் கூறி ஏன் நிதியை வாங்கவில்லை?. எனது வார்டில் 70 சதவீத அளவுக்கு வரி வசூலித்து கொடுக்கப்பட்டுள்ளது. எனது வார்டுக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை?.
டாக்டர் சங்கவி முருகதாஸ்:- நெடுஞ்சாலை துறை மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார் பொருத்த வேண்டும் என கேட்டுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசிடம் ரூ.20 கோடி கேட்டுள்ளோம். நிதி வந்தவுடன் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். வரி வசூல் ரூ.20 கோடி நிலுவையில் உள்ளது. வரியை வசூலித்து கொடுத்தால் அந்தந்த வார்டுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து குறைகளும் சரி செய்யப்படும்.
குடிநீர் பிரச்சினை
குமாரி முருகன்(பா.ம.க.) :- வரி எவ்வளவு வசூல் செய்தீர்கள்? கடைகளுக்கெல்லாம் எவ்வளவு வரி வாங்கியுள்ளீர்கள்? என விளக்கமாக தெரிவிக்க வேண்டும்.
டாக்டர் சங்கவி முருகதாஸ்:- வரி வசூல் எவ்வளவு நடந்துள்ளது என கவுன்சிலருக்கு தெரிவிக்கப்படும்.
பி.ஜி.சேகர்(த.வா.க.):-
19 -வது வார்டில் சாலை குறுக்கே வெட்டப்பட்ட பள்ளத்தை சரி செய்து தர வேண்டும். ஆழ்துளை கிணறு அமைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. மின்மோட்டார் பொருத்தி 19 மற்றும் 20 -வது வார்டு மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
டாக்டர் சங்கவி முருகதாஸ்:- விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் முத்துக்குமார், வெங்கடேசன், அன்சர் அலி, ஷகிலா, பாண்டியன், அன்பழகன், சிங்காரவேல், பக்கிரிசாமி உள்பட அனைத்து கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.