தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் மாசு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம் மாசு(கந்தக டை ஆக்சைடு) வெளியேறுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தலைமை என்ஜினீயர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம் கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தலைமை என்ஜினீயர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
அனல்மின்நிலையம்
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. மிகவும் பழமையான இந்த எந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. சமீபகாலமாக மின்சார தேவைக்கு ஏற்ப மின்உற்பத்தி எந்திரங்களை இயக்கி வருகின்றனர். நேற்று 2-வது மின்உற்பத்தி எந்திரம் தவிர மற்ற 4 எந்திரங்களும் இயக்கப்பட்டு வந்தன. மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறை அனல்மின்நிலையங்களில் இருந்து கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகையால் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.
கந்தக டை ஆக்சைடு
இது குறித்து தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை என்ஜினீயர் கிருஷ்ணகுமார் கூறும் போது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து கந்தகடை ஆக்சைடு வெளியேறுவதை தடுப்பதற்காக, புளு கியாஸ் டிசல்பியூசேசன் என்ற நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கந்தகடை ஆக்சைடு வெளியேறுவதை தடுக்க முடியும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. அதன்பிறகு பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் பணி முழுமையாக முடிக்கப்படும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பணியை முடிப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் மாசு இல்லாத அனல்மின்நிலையமாக மாறும் என்று கூறினார்.