திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு கருத்தரங்கம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறை சார்பாக பள்ளி மாணவிகளுக்கு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பொருளியல் துறை தலைவர் சண்முகவல்லி வரவேற்று பேசினார்.
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி பொருளியல் துறை உதவிப்பேராசிரியர் தே.கதிரவன் "பொருளியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற முன்னாள் மாணவிகளும், நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பொருளியல் துறை தலைவர் மகாலட்சுமி, சாத்தான்குளம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி உதவி மேலாளர் ரத்தினவள்ளி, ஏரல் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரியாதேவி ஆகியோர் பேசும்போது, நாங்கள் இந்த கல்லூரியில் பொருளாதாரம் படித்தோம். பொருளியல் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்விற்கான வழிகாட்டுதல் வகுப்புகளில் கலந்து கொள்வோம். கல்லூரியில் வழங்கப்பட்டு வரும் பிற வாய்ப்புகளையும் நூலக வசதிகளையும் நல்ல முறையில் பயன்படுத்தினோம். இதனால் நாங்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இன்று இத்தகைய நல்ல பதவியில் இருக்கிறோம் என கூறினர். பின்னர் கல்லூரியின் பொருளியல் துறை மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை அனைவரும் கண்டுகளித்தனர். பள்ளி மாணவிகள் சிலர் நிகழ்ச்சி பற்றிய தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில், 12 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பொருளியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் செல்வராணி மற்றும் ஜின்சிமோள் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில், பொருளியல் துறை உதவி பேராசிரியை கவிதா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜெயந்தி, பால்தங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.