திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அய்யப்ப பக்தர்கள் வியாழக்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சரண கோஷம் முழங்க வியாழக்கிழமை ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் மண்டல பூஜைக்காக அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தனர்.
மாலை அணிந்தனர்
அவர்கள் கடலில் புனித நீராடிய பக்தர்கள், தங்கள் குருசாமி மூலமும், கோவில் அர்ச்சகர்கள் மூலமும் மாலை அணிந்தனர். அய்யப்ப சாமி சரணகோஷங்களை எழுப்பியவாறு, பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கார்த்திகை மாதம் பிறப்பை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
சரண கோஷம்
நேற்று காலை முதல் இரவு வரை கோவில் வளாகத்தில் அய்யப்ப சாமி சரண கோஷங்கள் எதிரொலித்த வண்ணம் இருந்தது.