தூத்துக்குடி கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மரப்பாதை அமைக்க ஏற்பாடு:அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மரப்பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலைகளை கால்வைத்து ரசிக்கும் வகையில் நிரந்தர மரப்பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
கோவில்பட்டி நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளரும், நகரசபை தலைவருமான் கா. கருணாநிதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து குழு துணை தலைவர் கே.சந்திரசேகர், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்பராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கீதாஜீவன்
பின்னர் அமைச்சர் கூறுகையில், கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக அடுத்த மாதம்(டிச.,) 2-ந்தேதி மாலையில் திறந்து வைக்கிறார். கோவில்பட்டி நினைவு இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார். சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மரப்பாதையை முதல்-அமைச்சர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பாதை
இதே போன்று தூத்துக்குடி மாநகரத்திலும் மாற்றுத் திறனாளிகள் நேரிடையாக கடல் அலையை கால் வைத்து மகிழும் வண்ணம் மரப்பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் படிகளில் ஏற முடியாது. அவர்கள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளம், மாடிக்கு செல்லும் வகையில் லிப்ட் வசதி செய்ய வேண்டும், பார்வையில்லாதவர்கள் செல்வதற்காக ஒரு வழித்தடம் அமைக்க வேண்டும்.
அந்த வகையில் அனைத்து அரசு அலுவலக கட்டிடத்திலும் இந்த வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் எல்லா இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வரும் நிலை ஏற்படும்' என்றார்.