தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுக் கலந்தாய்வு மூலமாக 49 மாணவர்கள் (15 ஆண்கள் மற்றும் 34 பெண்கள்) இளநிலை மீன்வள பட்டப்படிப்புக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கின. புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ப.அகிலன் தலைமை தாங்கி பேசினார். கல்விமுறை விதிகள் பற்றியும், மாணவர்களுக்கான அரசு உதவித்தொகை பற்றியும் மாணவர் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஆதித்தன் எடுத்துக்கூறினார். மாணவர் விடுதியின் சட்டத்திட்டங்கள் குறித்து காப்பாளர் பா.பத்மாவதி விளக்கினார். அனைத்து புதிய மாணவர்களும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர். உதவி பேராசிரியர் சுதன் நன்றி கூறினார்.