தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில்கடல் உணவு பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் உணவு பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி நடந்தது.
சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தின் நிதி உதவியிடன், தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் இயங்கி கொண்டிருக்கும் கடல்சார் உணவுப்பொருள் வணிக மையத்தின் மூலம் 'கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்' என்ற இரண்டு நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி நடந்தது. பயிற்சியில் திருச்சியில் உள்ள பிசப் ஹெபர் கல்லூரியைச் சேர்ந்த 66 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியன் மீன்பதன தொழில்நுட்பத்துறை உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் பா.கணேசன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ந.வ.சுஜாத்குமார் பயிற்சியை தொடங்கி வைத்து, பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். திருச்சி பிசப் ஹெபர் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் ஷீபா மற்றும் புவனா ஆகியோர் பங்கேற்று பேசினர்.
மீன் தொழில் முனைவோரின் பண்புகள், கடல் உணவுப்பொருள்களில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், அவை சார்ந்த தொழில் தொடங்குவதற்கான நிதிவழிகள் போன்ற தலைப்புகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. இப்பயிற்சியில் பயிற்சியாளர்களுக்கு கடற்பாசி சேர்த்த அடுமனை உணவுப்பொருட்கள், மீன் சேர்த்த ரொட்டி தோய்ந்த உணவுப் பொருட்கள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியின் நிறைவு விழாவில் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சியை உதவிப்பேராசிரியர் பா.கணேசன் ஒருங்கிணைத்தார்.