தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்45 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 45 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 45 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக விழிப்புணர்வு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் நலனுக்காக, தரைத்தளத்தில் உள்ள குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கம் ரூ.75 லட்சம் செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்களை போலீஸ், வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
மேலும் கிராமங்கள்தோறும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு ஆத்தூர் அருகே தலைவன்வடலி கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு கண்டது.
45 ஆயிரம் டன் ஜிப்சம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1 லட்சத்து 65 ஆயிரம் மெட்ரிக் டன் ஜிப்சம் கழிவுகள் இருந்தன. அவற்றை அகற்றும் பணிகள் பலத்த கண்காணிப்புடன் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக உள்ளூர் மேலாண்மை குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 45 ஆயிரம் மெட்ரிக் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து அங்கு கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.