உடன்குடி அனல் மின்நிலையத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரம்


உடன்குடி அனல் மின்நிலையத்தில்   இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரம்
x

உடன்குடி அனல்மின்நிலையத்திற்கு கடல் மார்க்கமாக கொண்டு வரப்படும் நிலக்கரியை எடுத்து வருவதற்காக ராட்சத மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அனல்மின்நிலையத்திற்கு கடல் மார்க்கமாக கொண்டு வரப்படும் நிலக்கரியை எடுத்து வருவதற்காக ராட்சத மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அனல் மின்நிலையம்

உடன்குடியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மூன்று கட்டங்களாக அனல்மின்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 660 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட இரு அலகு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த இரு கட்டங்களில் 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்நிலையங்கள் அமைக்கபட உள்ளது.

இந்த அனல் மின் நிலையங்கள் கடல் நீர் மட்டத்தை விட தாழ்வாக இருப்பதால், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் உள்ள குளங்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு சரள்மணலை கொண்டு தரையை உயர்த்தும் பணி நடந்து முடிந்துள்ளது.

இறங்கு தளம்

மேலும் அனல்மின்நிலைய வளாகத்தைச் சுற்றி சுமார் 25 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு நூற்றுக்கணக்கான பணியாளர்களுடன் கட்டிடங்கள் கட்டும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. அருகில் உள்ள தருவைகுளத்து தண்ணீர் அனல்மின்நிலையத்தின் உள்ளே வரமுடியாத அளவுக்கு உறுதியான சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியை ஒட்டி கல்லாமொழி கடற்கரைபகுதியிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும் பணியும், சுமார் 1.50 கோடி டன் நிலக்கரி கையாளும் வகையில் நிலக்கரி இறங்கு தளம் அமைப்பதற்கான பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

ராட்சத இரும்பு பாலம்

கடற்கரையிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் நிலக்கரி கொண்டு வரும் கப்பலை நிறுத்திவிட்டு, கப்பலில் உள்ள நிலக்கரியை, உயர்மட்ட ராட்சத பாலம் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி உயர் மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தபணிக்காக பெரிய அளவிலான பாறாங்கற்கள் சாத்தான்குளம், பேய்க்குளம், நெல்லை மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தினமும் நுற்றுகணக்கான லாரிகளில் கொண்டு வரப்பட்டு கடலில் குவிக்கப்பட்டு வருகிறது. மேலும் கப்பலில் கொண்டு வரப்படும் நிலக்கரியை ராட்சத கன்வெயர் மூலம் கடலில் இருந்து அனல்மின்நிலையத்திற்கு நேரடியாககொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு பாதுகாப்பு வசதியுடன், நவீனமாடலில் கூடுதல் சக்தி கொண்ட அனல்மின் நிலையம் உடன்குடியில் உருவாக்கப்படுகிறது. கடற்கரை வழியாக வரும் நிலக்கரியை கடலில் இருந்து நேரடியாக கொண்டு வரும் உயர்மட்ட கம்பிபாலம் பணி முடிந்தவுடன் முதல் மின் அலகில் மின்சாரம் உற்பத்தி தொடங்கும். இதனால் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், என்றார்.


Next Story