வடசேரி சந்திப்பில்ரவுண்டானா அமைக்க திட்டம்
நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் ஆய்வு செய்தார்.
போக்குவரத்து நெரிசல்
நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வடசேரி சந்திப்பும் ஒன்று. இந்த சந்திப்பை ஒட்டி கனகமூலம் சந்தை உள்ளது. திருவனந்தபுரம் சாலை, நெல்லை செல்லும் சாலை, பூதப்பாண்டி செல்லும் சாலை என முக்கிய சாலைகள் இணைவதால் அது முக்கிய சந்திப்பாக திகழ்கிறது. இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால் தினமும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் வடசேரி சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வடசேரி சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அனுமதிகோரி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது வடசேரி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடசேரி சந்திப்பில் ரவுண்டானா
பஸ் நிலைய பணியோடு சேர்த்து வடசேரி சந்திப்பிலும் ரவுண்டானா அமைக்கும் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன நெரிசலை கணக்கில் கொண்டு எந்த வடிவில் ரவுண்டானா அமைக்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்ய நெடுஞ்சாலை துறைக்கு அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இதுதொடர்பாக ஆய்வு செய்ய நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்தார். பின்னர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து வடசேரி சந்திப்பில் ஆய்வு செய்தார். ரவுண்டானா அமைப்பது தொடர்பாக ஏற்கனவே வரைபடம் தயார் செய்யப்பட்டு இருந்தது. அந்த வரைபடத்தை அவர் பார்வையிட்டார். 20 மீட்டர் சுற்றளவில் ரவுண்டானா அமைக்க சாத்திய கூறுகள் இருப்பதாக திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி கிடைத்ததும் அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
ஆய்வு
இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் கன்னியாகுமரியில் விவேகானந்தா நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இணைப்பு பால பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் சுசீந்திரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நட்டார்.