ஆத்திப்பட்டு- அரும்பட்டு ரெயில்வேகேட் அருகே பள்ளம் தோண்டி சாலை துண்டிப்பு; கிராம மக்கள் போராட்டம்


ஆத்திப்பட்டு- அரும்பட்டு ரெயில்வேகேட் அருகே பள்ளம் தோண்டி சாலை துண்டிப்பு; கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்திப்பட்டு- அரும்பட்டு ரெயில்வேகேட் அருகே பள்ளம் தோண்டி சாலை துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே விருத்தாசலம்-விழுப்புரம் ரெயில் பாதையில் ஆத்திப்பட்டு கிராமத்தில் இருந்து அரும்பட்டு செல்லும் வழியில் ரெயில்வேகேட் உள்ளது. இந்த வழியாக அத்திப்பட்டு கிராம மக்கள் அருகில் உள்ள வயல்வெளி, சுடுகாடு, ரேஷன் கடைக்கு சென்று வருகிறார்கள். இதனால் விபத்து அபாயம் உள்ளதாக கூறி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் விருத்தாசலம் ரெயில்வே பிரிவு என்ஜினீயர் சுந்தர்ராஜன் தலைமையில் ரெயில்வே ஊழியர்கள் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டி ஆத்திப்பட்டு- அரும்பட்டு சாலையை துண்டித்தனர்.

இதைபார்த்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பள்ளத்தை சமன் செய்யக்கோரி ரெயில்வே அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் சாலையை மீண்டும் சமன் செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரெயில்வே ஊழியர்கள் தோண்டிய பள்ளத்தை மீண்டும் மூடி சரி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.


Next Story