ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.9,500 மோசடி
பேரணாம்பட்டு அருகே ஷூ கம்பெனி காவலாளி ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.9500 மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
பேரணாம்பட்டு அருகே உள்ள மிட்டப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 61). சின்னவரிக்கம் கிராமத்தில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 12-ந் தேதி திரு.வி.க. நகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கூறியிருக்கிறார்.
அந்த நபர் ஏ.டி.எம். கார்டை பெற்றுக் கொண்டு உதவி செய்வது போல் நடித்து உங்கள் கணக்கில் பணம் இல்லை எனக்கூறி மற்றொரு ஏ.டி.எம். கார்டை பாண்டுரங்கனிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார். இதனை உண்மை என்று நம்பிய பாண்டுரங்கன் வீட்டுக்கு சென்றார்.
ரூ.9,500 மோசடி
இந்த நிலையில் ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வதாக நடித்த அந்த நபர் 5 நாட்கள் கழித்து பாண்டுரங்கனின் செல்போன் எண்ணிற்கு, வெவ்வேறு எண்களிலிருந்து தொடர்பு கொண்டு உனது ஏ.டி.எம். கார்டை என்னிடம் மாற்றி கொடுத்து விட்டு, என்னுடைய கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் எடுத்து இருக்கிறாய் என்றும், வாலாஜா வங்கி அருகில் வரும்மாறும் தமிழிலும், தெலுங்கிலும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் குழம்பிப்போன பாண்டுரங்கன் வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கை சரி பார்த்த போது அவருடைய கணக்கிலிருந்து அந்த மர்ம நபர் பேரணாம்பட்டில் உள்ள மற்றொரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் பாண்டுரங்கனின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.9,500 எடுத்திருப்பதும், தன்னிடம் வேறு பெயரில் உள்ள ஏ.டி.எம். கார்டை கொடுத்து மோசடி செய்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் பாண்டுரங்கன் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.