ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
x

குடியாத்தத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை இரவு ரோந்து சென்ற போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

வேலூர்

கொள்ளை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் இருந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் பக்கத்திலேயே ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று அதிகாலை மர்ம நபர் புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விட்டு, சுத்தியலால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார்.

வாலிபர் கைது

அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் அந்த வழியாக சென்றனர். கையில் சுத்தியலுடன் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததை இன்ஸ்பெக்டர் லட்சுமி பார்த்துள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட அவர், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் பின்புறம் உள்ள நரசிம்மர் கோவில் தெருவை சேர்ந்த முரளி மகன் கார்த்தி (வயது 24) என்பதும் கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்தியை கைது செய்து, அவரிடமிருந்து சுத்தியல், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாருக்கு பாராட்டு

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு ஏ.டி.எம். கொள்ளை முயற்சியை தடுத்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசாரை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.


Next Story