ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; வாலிபர் கைது
பழனியில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.6 லட்சம் தப்பியது.
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
பழனி தலைமை தபால் அலுவலகம் அருகே, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று செயல்படுகிறது. இந்த வங்கியின் அருகிலேயே அதன் ஏ.டி.எம். மையம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வங்கி மேலாளரின் செல்போனுக்கு 'அலர்ட் மெசேஜ்' வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடப்பதாக பழனி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். மைய எந்திரம் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தை சோதனை செய்தபோது, அதில் இருந்த ரூ.6 லட்சம் கொள்ளை ேபாகாமல் தப்பியது. இதை பார்த்து அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கண்காணிப்பு கேமரா
பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், உடைக்க முடியாததால் திரும்பி சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க, பழனி நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
செல்போன் கடையில் கைவரிசை
விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியை சேர்ந்த சுந்தரேசன் மகன் சூரியகாந்தி (வயது 23) என்று தெரியவந்தது. அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
மேலும் அவரிடம் சோதனை செய்தபோது, 2 செல்போன்கள் மற்றும் பணம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில் அவர், ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. அங்கு எந்திரத்தை உடைக்க முடியாததால் ஏ.டி.எம். மையத்துக்கு அருகில் உள்ள ஜியாவுஹக் (46) என்பவரது செல்போன் கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த ரூ.12 ஆயிரம், 2 செல்போன்களை திருடியது தெரியவந்தது.
வாலிபர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூரியகாந்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைதான சூரியகாந்தி மீது தென்காசி, புளியங்குடி பகுதியில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பழனியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.