1,190 மாணவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு, உயர்கல்வி வேலை வாய்ப்பு மலர்


1,190 மாணவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு, உயர்கல்வி வேலை வாய்ப்பு மலர்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 1,190 மாணவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மலரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.

திண்டுக்கல்

புதுமைப்பெண் திட்டம்

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1 லட்சத்து 16 ஆயிரத்து 342 மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பலன் அடைந்தார்கள். மேலும் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேல் படிப்பை பாதியில் நிறுத்திய 12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயர்கல்வி படிப்பை தொடங்கினர்.

இந்த நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மலரை வழங்கினார்.

1,190 மாணவிகள்

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் படிக்கும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக மாதம் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் இளமதி, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 33 அரசு கல்லூரிகள் உள்பட 103 கல்லூரிகளில் படிக்கும் 1,190 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறும் வகையில் வங்கி ஏ.டி.எம். கார்டு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மலர் ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இல்லம் தேடி கல்வி

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தற்போது 2-ம் கட்டமாக மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கொரோனா காலத்தில் கூட மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்தினார்.

அதேபோல் நான் முதல்வன் திட்டம், உயர்கல்வி உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டதால் உயர்கல்வி படிப்பை பாதியில் நிறுத்துவது குறைந்து தற்போது கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்து ஓராண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 4 புதிய கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பழனியில் சித்தா கல்லூரி, கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மையம் ஆகியவற்றை தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே திண்டுக்கல் மாவட்டம் கல்வியில் முதன்மை மாவட்டமாக விளங்க வேண்டும் என்றால் மாணவ-மாணவிகள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story