பண்டிகை,விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் தவிப்பு:ஏமாற்றும் 'ஏ.டி.எம்.' எந்திரங்கள்-பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் கருத்து


பண்டிகை,விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் தவிப்பு:ஏமாற்றும் ஏ.டி.எம். எந்திரங்கள்-பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் கருத்து
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:46 PM GMT)

‘ஏ.டி.எம்.' எந்திரங்கள் குறித்து பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்காசி

ஒரு நேரத்தில் வசதியானவர்கள் மட்டுமே வங்கிகளில் கணக்கு வைத்திருந்தார்கள். ஒரு கிராமத்தில் ஒன்றோ, இரண்டு பேர்தான் வங்கிகளில் பணம் போடுவது வழக்கம். அப்படிப் போடுகிறவர்கள் மிராசுதார் அல்லது வியாபார பிரமுகர்களாக இருக்கக்கூடும்.

'அவரு பேங்கில் பணம் வைத்திருக்கிறார்' என்று அவர்களை கிராமங்களில் பெருமையாகச் சொல்வது உண்டு.

சாதாரண மக்களுக்கு வங்கி வாசல்கள்கூட தெரியாமல் இருந்தது.

காலம் மாறியது

இப்போது காலம் மாறிவிட்டது. கடன், சேமிப்பு, அரசு உதவித்தொகை, ஓய்வு ஊதியம் என்று பெரும்பாலான பணிகளுக்கு மக்கள் வங்கிகளின் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து விட்டார்கள். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியாக வங்கிச் சேவை கிடைக்கிறதா? என்று கேட்டால், இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.

ஒரு தனியார் வங்கியில் வாடிக்கையாளரிடம் காட்டுகின்ற கனிவு, வேலையில் துரிதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கிடைப்பது இல்லை. உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, அதை எடுக்க வரிசையில் கால்கடுக்க நிற்க வேண்டும்.

ஏ.டி.எம். எந்திரம்

'ஏ.டி.எம்.' என்கிற தானியங்கி எந்திரம் அறிமுகமான பிறகு அந்த நிலை மாறி வந்தது. இருந்தாலும் அதன் சேவைகளிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகள் குறித்தும் வங்கிகளின் சேவைகள் குறித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

பணம் சரிவர வருவதில்லை

நெல்லை பேட்டையை சேர்ந்த சரிதா:-

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.களில் தைப்பொங்கல், புத்தாண்டு, சித்திரை விசு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை, திருவிழா நாட்கள் மற்றும் மாதத்தின் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை உள்ள நாட்களில் பணம் சரிவர வருவதில்லை. வங்கி ஏ.டி.எம். சரிவர இயங்குவதில்லை. அவுட் ஆப் ஆர்டர், நெட் ஒர்க் பிசி என்றும், பணம் இல்லை என்று சொல்வதற்கு பதில் உங்கள் வங்கி கிளையை அணுகவும் என்றும் தகவல் வரும். இதனால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்தால் ஏ.டி.எம்.க்கு சென்று பணம் எடுக்க முயற்சிக்கும் போது பணம் வராமல் ஏமாற்றம் ஏற்படுகிறது. மேலும் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியை தவிர மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கோ, பணம் எவ்வளவு உள்ளது? என்பதை பார்ப்பதற்கோ ஏ.டி.எம்.மை பயன்படுத்தினால் அதற்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வங்கி நிர்வாகம் ஏ.டி.எம்.களில் எப்பொழுதும் போதுமான அளவு பணம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதை வங்கி அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சுகாதாரம் இல்லை

நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலகுமரகுரு:-

வங்கிகளில் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் இணையதளத்தின் மூலம் பணம் எடுப்பதையும், போடுவதையும் தான் விரும்புகிறார்கள். வங்கிக்கு பணம் போட சென்றால் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் போடுங்கள் என்று தான் கூறுகிறார்கள். இதனால் பெரும்பாலான ஊழியர்கள் ஏ.டி.எம்.மில் தான் பணம் போடுகின்றனர். பணம் எடுக்கிறார்கள்.

ஏ.டி.எம்.கள் சம்பளம் போடுகின்ற நாட்கள், திருவிழா நாட்களில் முழுமையாக இயங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

நெல்லை மாநகர பகுதியில் உள்ள பல ஏ.டி.எம்.கள் முறையாக பராமரிக்கப்படாமல், சுகாதாரம் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. ஏ.டி.எம்.மில் குப்பைகளாக ரசீது கிடைக்கிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டும். பணம் போடுகின்ற எந்திரத்தில் பணம் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான எந்திரங்களில் பணம் வருவதில்லை.

போதிய அளவு பணம்

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன்:-

வங்கி ஏ.டி.எம்.களில் தேவையான அளவு பணம் வைக்கப்பட்டு வருகிறது. சில வங்கிகள் தாங்களாகவே தங்களுடைய ஏ.டி.எம்.மையங்களை பராமரித்து பணம் வைத்து வருகிறார்கள். அவர்கள் உடனுக்குடன் பணம் வைத்து விடுகிறார்கள். வேலை இல்லாத நாட்களிலும் அதற்கு தேவையான அளவு பணம் வைக்கப்படுகிறது.

சில வங்கிகள் தனியார் மூலம் ஏ.டி.எம்.களில் பணம் வைக்கிறார்கள். இருந்தாலும் போதிய அளவு பணம் வைக்கப்பட்டு வருகிறது. ஏ.டி.எம்.மில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் இல்லை என்றால் உடனே வங்கி மேலாளருக்கு தகவல் வந்துவிடும். அவர் உரிய நபரிடம் உடனே தகவல் தெரிவித்து பணம் வைத்து விடுவார். ஒரு ஏ.டி.எம். மையம் இயங்கவில்லை என்றால் சில நிமிடங்களிலேயே வங்கி மேலாளருக்கு தகவல் வந்துவிடும். அவர் அதை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுப்பார். ஏ.டி.எம்.மில் போதிய அளவு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான அளவு வங்கி நிர்வாகம் பணம் வைத்து வருகிறது.

வாடிக்கையாளர் சேவை

வங்கி ஊழியர் ராமசுப்பு:-

வங்கி ஏ.டி.எம்.களில் தேவையான அளவு பணம் வைக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்து பணம் எடுத்துச்செல்கின்றனர். இதனால் ஏ.டி.எம்.களில் பணம் குறைந்து வருகிறது. இருந்தாலும் உடனுக்குடன் பணம் வைக்கப்படுகிறது. தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனையை விரும்புகிறார்கள். ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுக்கும் எந்திரத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் அதை உடனே சரி செய்து விடுகிறோம். பணம் போடுகின்ற எந்திரத்திலும் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ளலாம். வாடிக்கையாளருக்கு சேவை செய்வதே வங்கியின் நோக்கமாகும்.

சீரமைக்க வேண்டும்

தென்காசியை சேர்ந்த ஜே.கே.டி. சைரஸ் மராரி கமலம்:-

ஏ.டி.எம். எந்திரத்தை நம்பி எந்த செயலிலும் ஈடுபட முடியாது. திருவிழா காலங்கள் மட்டுமல்ல சாதாரண நாட்களில் கூட சில எந்திரத்தில் பணம் இருப்பதில்லை. அவசரத்திற்கு பணம் எடுக்க செல்லும்போது சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கும். மேலும் சில நேரங்களில் பணம் கிடைக்காது.

அந்தந்த வங்கிகள் தங்களது ஏ.டி.எம்.களை சரியான முறையில் பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் சீரமைக்க வேண்டும்.

சிரமம்

தென்காசி அருகே உள்ள மேலகரம் மின்நகர் பகுதியைச் சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகி சங்கரநாராயணன் -

ஏ.டி.எம். எந்திர செயல்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சிரமத்தையும் கொடுப்பதை மறுப்பதற்கில்லை. தொடர் விடுமுறையின் போதும், வங்கிகள் வேலை நிறுத்தத்தின் போதும் ஏ.டி.எம்.களில் போதுமான பணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் சிரமப்படுவது வாடிக்கையாகி விட்டது.

அதுபோன்ற நேரங்களில் பயனாளிகள் தங்களது கார்டை செருகி பணம் எடுக்க முற்படும் போது, பணம் வெளியே வராமல் இருப்பதும், நெட் ஒர்க் பிரச்சினைகளால் பணம் நமக்கு கிடைக்காமல் அதே நேரத்தில் நமது வங்கி கணக்கிலிருந்து பணம் டெபிட் ஆனது போல குறுஞ்செய்தி வருவதும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது.

அந்த பணம் மீண்டும் நமது கணக்கிற்கு வரவு வைக்க பெரும் சிரமம் ஆகிவிடுகிறது. இதுமட்டுமல்லாமல் நாளுக்கு நாள் மாறி வரும் டெக்னாலஜி மாற்றங்களும் வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. இவற்றையெல்லாம் சீராக்கி வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை குறைக்க வங்கிகள் முன்வர வேண்டும்.

வங்கிகளுக்கு அபராதம்

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் உள்ளதா? என்று வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களை இயக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லாதபோது பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏ.டி.எம். எந்திரங்கள் ஒரு மாதத்துக்கு பணம் இல்லாமல் எவ்வளவு நேரம் இருந்தன? என்பது பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு கூறினர்.


Next Story