'ஏ.டி.எம். கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது' போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி


ஏ.டி.எம். கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது. இது போன்ற கொள்ளை சம்பவங்கள் அரியானா போன்ற வடமாநிலங்களில் ஏற்கனவே நடைபெற்றுள்ளது.

சென்னையிலும் அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இது போன்று ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைதானார்கள்.

ஆனால் இந்த சம்பவம் வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அரங்கேற்றப்பட்டு உள்ளது. இதில் கை தேர்ந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு பல நாட்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளனர்.

போலீஸ் கண்காணிப்பு

இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் வடமாநிலத்துக்கு தப்பி சென்றுவிட்டார்களா? அல்லது திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பதுங்கி இருக்கிறார்களா? என்பது பற்றியும் கண்காணித்து வருகிறோம்.

ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் எல்லைப்பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மீண்டும் இது போன்று இன்னொரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஏ.டி.எம். மையங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தலைசிறந்த நிபுணர்கள்

ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் அங்கேயே முகாமிட்டு விசாரித்து வருகிறார்கள். கை தேர்ந்த கை ரேகை நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்யும் தலைசிறந்த நிபுணர்கள் சென்னை மற்றும் கோவையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.


Next Story