ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்
கார்டை சொருகுவதற்கு முன்பே ஏ.டி.எம்.எந்திரத்தில் தானாக 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்தன. இந்த பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர் நேர்மையுடன் வங்கியில் ஒப்படைத்தார்.
குளச்சல்:
கார்டை சொருகுவதற்கு முன்பே ஏ.டி.எம்.எந்திரத்தில் தானாக 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்தன. இந்த பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர் நேர்மையுடன் வங்கியில் ஒப்படைத்தார்.
தானாக வந்த ரூபாய் நோட்டுகள்
குளச்சல் சன்னதி தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 54). இவர் அண்ணா சிலை சந்திப்பில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
அங்கு ஏ.டி.எம். கார்டை சொருக முயன்ற போது எந்திரத்தில் இருந்து தானாக பணம் வந்துள்ளது. கார்டையே சொருகவில்லை, அதற்குள் பணம் வருகிறதே என ஆச்சர்யத்துடன் அவர் அந்த பணத்தை எடுத்து எண்ணி பார்த்தார்.
நேர்மையுடன் ஒப்படைத்த டிரைவர்
அதில் 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந் தது. இது அனைத்தும் ரூ.500 நோட்டுகள் ஆகும். இந்த பணம் தன்னுடையது இல்லை என்பதால் அதனை நேர்மையுடன் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றார்.
அங்கு பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார். ஜெயச்சந்திரனின் நேர்மையை வங்கி மேலாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து வங்கி மேலாளர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட ஏ.டி. எம். எந்திரத்தில் பணம் எடுப்பதோடு, டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது. ஜெயச்சந்திரன் செல்வதற்கு முன்பு வாடிக்கையாளர் யாராவது பணத்தை எந்திரத்தில் டெபாசிட் செய்திருக்கலாம். ஆனால் எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பணம் உரிய கணக்கில் டெபாசிட் ஆகாமல் இருந்திருக்கும். இது தெரியாமல் அந்த வாடிக்கையாளர் சென்றிருக்கலாம். ஜெயச்சந்திரன் சென்றபோது அந்த பணம் வெளியே வந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை வரவழைத்து அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஜெயச்சந்திரனின் நேர்மை பாராட்டுக்குரியது" என்றார்.