ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஏஜெண்டு சிக்கினாரா?
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்த ஏஜெண்டு கர்நாடகாவில் சிக்கியதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்த ஏஜெண்டு கர்நாடகாவில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் போலீசார் வருவதையறிந்து கொள்ளையர்கள் வடமாநிலத்துக்கு தப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது.
போலீசார் தீவிர விசாரணை
திருவண்ணாமலை நகரில் உள்ள தேனிமலை பகுதி மற்றும் மாரியம்மன் கோவில் தெரு, போளூரில் ரெயில் நிலைய சாலை ஆகிய 3 இடங்களில் கடந்த 12-ந் தேதி அதிகாலை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம். மையங்களுக்குள் புகுந்த கும்பல் ஏ.டி.எம்.எந்திரங்களை 'வெல்டிங்' செய்து வெட்டி எடுத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.
அதேபோல் திருவண்ணாமலையை அடுத்த கலசபாக்கத்தில் ஓன் இண்டியா வங்கியின் ஏ.டி.எம். மையத்திலும் மர்ம நபர்கள் 'வெல்டிங்' எந்திரத்தின் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி பணத்தை கொள்ளையடித்தனர். 4 ஏ.டி.எம்.மையங்களிலும் மொத்தம் ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவங்கள் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இது குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், திருவண்ணாமலையில் 2 நாட்கள் முகாமிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் 9 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்படை போலீசார் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடைக்கலம் கொடுத்தவர் சிக்கினார்
இதேபோன்று வேறு இடங்களில் ஏற்கனவே நடைபெற்ற கொள்ளை சம்பவங்களை வைத்து தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகா, அரியானா மாநிலங்களுக்கு சென்று பழைய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்து அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போலீசாருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடகா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கர்நாடகா மாநிலத்திற்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப். நகரில் தங்கியிருந்ததாகவும் அவர்களுக்கு ஏஜெண்டு ஒருவர் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அந்த ஏஜெண்டை தனிப்படையினர் பிடித்ததாகவும், போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
நெருங்கிய போலீசார்
மேலும் போலீசார் நெருங்கியதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது எந்தவித தகவலும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இருப்பினும் கொள்ளையர்களை தனிப்படையினர் நெருங்கி விட்டதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.