வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற போதை வாலிபர் கைது
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற போதை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் கற்களால் தாக்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, அதில் இருந்த பல லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் ஏ.டி.எம்.எந்திரம் தாக்கப்பட்டவுடன், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்தது. உடனே இதுகுறித்து கே.கே.நகர் போலீசுக்கு குறிப்பிட்ட வங்கியின் அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். உடனடியாக உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்துக்கொண்டிருந்த மர்ம வாலிபர், போலீசை பார்த்ததும் சைக்கிள் ஒன்றில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சி அடிப்படையில், தப்பி ஓடிய நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அசோக் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். உணவு வினியோக வேலை பார்த்து வந்த அசோக் செலவுக்கு பணம் இல்லாததால், குடிபோதையில் வங்கி ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து திருட முயன்றது விசாரணையில் தெரியவந்தது.