முதியவரிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏமாற்றியவர் கைது
முதியவரிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏமாற்றியவர் கைது
பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏமாற்றிவரை போலீசார் கைது செய்தனர்.
முதியவர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நம்பிவயல் மேலத்தெருவை சேர்ந்தவர் வைரவசுந்தரம் (வயது60). நேற்று இவர் பட்டுக்கோட்டை தலையாரி தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது அந்த ஏ.டி.எம். அருகே நின்று கொண்டிருந்த ஒருவர், நான் பணம் எடுத்து தருகிறேன். உங்கள் கார்டை கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
பணம் எடுப்பது போல் நடித்து...
இதனை நம்பிய வைரவசுந்தரம் அந்த நபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். அந்த நபர், ஏ.டி.எம். அருகே சென்று பணம் எடுப்பது போல் நடித்துவிட்டு, உங்கள் கார்டுக்கு பணம் வரவில்லை என்று கூறிவிட்டு வைரவசுந்தரத்திடம் கார்டை கொடுத்துவிட்டு சென்று விட்டார். அந்த கார்டை வாங்கி பார்த்த வைரவசுந்தரம், அது தனது கார்டு இல்லை என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
கைது
இதனைத்தொடர்ந்து அந்த நபரை நகரில் உள்ள பல்வேறு ஏ.டி.எம்.களில் சென்று வைரவசுந்தரம் தேடினார். அப்போது பட்டுக்கோட்டை பெரிய தெரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஏ.டி.எம். அருகில் அந்த நபர் நின்று கொண்டிருந்ததை பார்த்த வைரவசுந்தரம் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்து பட்டுக்கோட்டை டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காந்திபுரம் பகுதியை சேர்ந்த அல்போன்ஸ்(38) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.