வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் இன்று மழை பெய்யும்


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் இன்று மழை பெய்யும்
x

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

அச்சுறுத்திய 'மாண்டஸ்' புயல் பெரிய அளவில் சேதங்கள், பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றது.

பொதுமக்கள் நிம்மதி அடைந்த வேளையில் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

எஸ்.பாலச்சந்திரன் பேட்டி

வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவின் வட பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வடக்கு கேரளா, தெற்கு கர்நாடகா கடற்கரை பகுதிகள் வழியாக தென்கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்லும்.

நாளை (இன்று) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வரும் நாட்களில் மேற்கு, வடமேற்கு திசைகளில் நகர்ந்து இந்திய கடற்பகுதிகளை விட்டு விலகி செல்லும்.

கனமழைக்கு வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியின் கிழக்கு பகுதிகளில் இருந்து நாளை (இன்று) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து, அந்தமான் கடலின் தெற்கு பகுதியில் நிலவக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) தமிழகம்-புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று) திருவள்ளூரில் அதிகபட்சமாக தலா 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் நகரின் பல பகுதிகளில் மிதமான மழையும், சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும். 'மாண்டஸ்' புயலின் மிச்சப்பகுதி வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவி இருந்தது. அது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (இன்று) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலுக்கு சென்றுவிடும். பின்னர் கடல் பகுதியில் இருந்து விலகி சென்றுவிடும்.

இயல்பை விட அதிகம்

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் அதாவது அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று (நேற்று) வரையிலான காலகட்டத்தில் தமிழகம்-புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 401 மி.மீ. இந்த காலகட்டத்தின் இயல்பான மழை அளவும் 401 மி.மீ.தான்.

சென்னையை பொறுத்தவரை 856 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது. இயல்பான மழை அளவு 736 மி.மீ. எனவே இயல்பை விட 16 சதவீத மழை அதிகமாக பெய்துள்ளது.

அக்டோபர் 1-ந் தேதி முதல் கடந்த 9-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் சென்னையின் மழை அளவு இயல்பை விட 1 சதவீதம் குறைவாகவே இருந்தது. தற்போது இயல்பை விட 16 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. காஞ்சீபுரத்தில் 35 சதவீத மழையும், ராணிப்பேட்டையில் 10 சதவீத மழையும், திருவள்ளூரில் 16 சதவீதம், வேலூரில் 17 சதவீத மழையும் இயல்பை விட அதிகமாக பெய்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தென் மாவட்டங்களில்...

வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

13-ந் தேதி (இன்று) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14-ந் தேதி (நாளை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story